×

ஆலங்கட்டி மழையால் இடுஹட்டி கிராமத்தில் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு- விவசாயிகள் முற்றுகை

ஊட்டி : ஆலங்கட்டி மழையால் இடுஹட்டி கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின், மழை குறைந்தே காணப்படும். டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் துவக்கம் வரை கடும் உறைப்பனி காணப்படும்.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் காணப்படும். ஒரு சில சமயங்களில் ஏப்ரல் மாதம் மழை பெய்யும். இது போன்று ஏப்ரல் மாதம் பெய்யும் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும்.

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். சில சமயங்களில் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்க்கும். இது போன்று ஆலங்கட்டி மழை பெய்தால், விவசாய பயிர்கள் பாதிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்று மார்ச் மாதம் பெய்த ஆலங்கட்டி மழையின் போது, பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப்புறப்பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கடந்த 3ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப்பாக, இடுஹட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் மற்றும் சைனீஸ் வகை காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு ஒன்றையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். இது குறித்து இடுஹட்டி கிராம தலைவர் பெள்ளி கூறுகையில்,``கடந்த 3ம் தேதி பெய்த ஆலங்கட்டி மழையால், மொரகுட்டி முதல் இடுஹட்டி வரை உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Iduhatti , Ooty: More than 100 acres of agricultural land in Iduhatti village affected by hailstorm
× RELATED ஊட்டி-இடுஹட்டி சாலையில் அபாயகர மரங்களை அகற்ற கோரிக்கை